சென்னையிலிருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தையை விலைக்கு வாங்கிய பெண் கைது செய்யப்பட்டதால் மனமுடைந்த கணவர் தூக்கு போட்டுக் கொண்டார்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகில் ஒரிச்சேரி புதூர் பகுதியை சேர்ந்த 49 வயதான தங்கவேல் என்வருக்கு 40 வயதில் சவீதா என்ற மனைவி உள்ளார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மின்வாரிய அலுவலகத்தில் தங்கவேல் ஊழியராக பணியாற்றி அங்கு குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஆனால் குழந்தைகள் இல்லை.
இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தங்கவேல் ஒரிச்சேரி புதூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது நேற்று முன்தினம் இரவு அறையின் கதவை பூட்டிவிட்டு தூங்கச் சென்ற அவர் நேற்று காலை நீண்ட நேரமாகியும் எழும்பவில்லை. இதனால் அவரின் பெற்றோர் கதவை தட்டிப் பார்த்தும் திறக்காததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தங்கவேல் கயிற்றால் தூக்கில் பிணமாக தொங்கி கிடந்துள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஆப்பக்கூடல் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தங்கவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் விசாரணை மேற்கொண்டனர். சவீதா கடந்த மூன்று மாதங்களுக்கு முன் யாரோ ஒருவரிடமிருந்து ஆண் குழந்தையை விலைக்கு வாங்கி வளர்த்து வந்தது தெரியவந்தது. இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த ஒரு குழந்தையின் பெற்றோர் தங்களது குழந்தையை காணவில்லை என்று சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இப்புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது விசாரணையில் சென்னை பெற்றோரின் குழந்தையை தான் சவிதா விலைக்கு வாங்கி இருக்கிறார் என்பது தெரியவந்தது. இந்த குழந்தையை யாரோ மர்ம நபர்கள் சென்னையில் இருந்து கடத்தி சவீதாவுக்கு விற்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து ஆப்பக்கூடல் காவல்துறையினர் சென்னை காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இத்தகவல் அறிந்த சென்னை காவல் துறையினர் தாராபுரம் வந்து குழந்தையை மீட்டனர். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து சவீதாவை கைது செய்து சென்னை சிறையில் அடைத்துள்ளனர். இதனால் மனமுடைந்த தங்கவேல் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.