கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை 4 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் பகுதியில் பெருமாள்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ் கண்ணன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ராஜேஷ் கண்ணன் கடந்த 2013-ஆம் ஆண்டு கூனியூர் பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவரை கொலை செய்து விட்டு கடந்த 2018-ஆம் ஆண்டு தலைமறைவாகி விட்டார். இந்த வழக்கை விசாரித்த திருநெல்வேலி நீதிமன்றம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குற்றவாளியை கைது செய்யும் படி உத்தரவிட்டது. ஆனால் ராஜேஷ் கண்ணனை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் சேரன்மகாதேவி காவல்துறையினருக்கு ராஜேஷ் கண்ணன் சென்னையில் தங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சென்னைக்கு சென்ற காவல்துறையினர் ராஜேஷ் கண்ணனை மடக்கி பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர்.