Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பல கட்டுப்பாடுகள் விதிச்சிருக்காங்க..! இதை மறுபரிசீலனை செய்யணும்… வியாபாரிகள் போராட்டத்தால் பரபரப்பு..!!

தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்யக்கோரி கொடைக்கானலில் வியாபாரிகள் 2000 கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனால் கடந்த 10-ஆம் தேதி முதல் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. இதற்கிடையே இன்று முதல் இரவு ஊரடங்கு கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளது. அதில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு ஆகிய சுற்றுலா இடங்களுக்கு வெளியூர் மற்றும் உள்ளூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு கொடைக்கானல் பகுதியை சேர்ந்த சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல தரப்பினரும், வியாபாரிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கொடைக்கானலில் வியாபாரிகள் சுற்றுலா பயணிகளுக்கு தடை உள்ளிட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் மறுபரிசீலனை செய்யக்கோரி திடீரென கடைகளை அடைத்தனர். அதன் பிறகு அந்த வியாபாரிகள் மூஞ்சிக்கல் பேருந்து நிலைய பகுதியில் திரண்டனர். அங்கு அறவழிப் போராட்டத்தில் சாலை ஓரமாக அமர்ந்து ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களிடம் காவல்துறையினர் மற்றும் ஆர்.டி.ஓ. சிவகுமார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அரசுக்கு வியாபாரிகளின் கோரிக்கை குறித்து தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து வியாபாரிகள் கட்டுப்பாடுகளை தளர்த்தா விட்டால் இன்று காலை 11 மணிக்கு மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி அங்கிருந்து கலைந்து சென்றனர். நகரில் உள்ள சுமார் 2,000 கடைகள் இந்த போராட்டம் காரணமாக அடைக்கப்பட்டிருந்தன. சுற்றுலா பயணிகள் கடைகள் அடைக்கப்பட்டதால் உணவு பொருட்கள் கிடைக்காமல் அவதி அடைந்தனர்.

Categories

Tech |