வேலை வாங்கி தருவதாக கூறி அரசு பேருந்து ஓட்டுனர் 43 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செவலபுரை கிராமத்தில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிங்கனூரில் வசிக்கும் தேவநாதன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு தமிழ்நாடு மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி தேவநாதன் ராஜசேகரிடம் இருந்து 7 லட்ச ரூபாயை வாங்கியுள்ளார். அதேபோல் ராஜேஷ் என்பவரிடமிருந்து 7 லட்ச ரூபாய், முருகன் என்பவரிடமிருந்து 5 லட்ச ரூபாய் என மொத்தம் 43 லட்ச ரூபாய் வரை தேவநாதன் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி மோசடி செய்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தேவநாதனை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் தேவநாதன் திண்டிவனம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநராக வேலை பார்ப்பது தெரியவந்தது. இவர் வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. இதற்கு சென்னையை சேர்ந்த தினேஷ், சரவணன் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இதனை அடுத்து தேவநாதனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். மேலும் தலைமறைவான சரவணன் மற்றும் தினேஷ் ஆகியோரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.