பஞ்சு மெத்தை உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டது.
மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் பகுதியில் உமர் பரூக் என்பவர் வசித்து வருகிறார். இவர் சோபா மற்றும் பஞ்சுமெத்தை உற்பத்தி செய்யும் ஆலை நடத்தி வருகிறார். இந்நிலையில் மதியம் 2 மணி அளவில் அந்த ஆலையிலிருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஆலையில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.