தர்மபுரி மாவட்டத்தில் திருடு போன 73 செல்போன்கள் மீட்கப்பட்டு, உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டன.
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2021-ம் வருடம் டிசம்பர் மாதம் 23 ஆம் தேதியிலிருந்து கடந்த 25ஆம் தேதி வரை நான்கு மாதங்கள் செல்போன்கள் திருட்டு, தொலைந்து போதல் போன்ற புகார்கள் அதிகமாக வந்துள்ள நிலையில் சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையின் அடிப்படையில் 73 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. அதன் மதிப்பு ரூ 10,70,000 இருக்கும் என்றனர்.
இந்த செல்போன்களை உரிய நபரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் பங்கேற்று செல்போனை உரிமையாளரிடம் ஒப்படைத்தார். மேலும் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் அண்ணாமலை, குணசேகரன், புஷ்பராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விஜயலட்சுமி, அன்பழகன் மற்றும் காவல்துறையினர் பங்கேற்றனர்.
இதனையடுத்து போலீஸ் சுப்பிரண்டு கலைச்செல்வன் பேசியதாவது, செல்போனில் தனிப்பட்ட விவரங்கள், முக்கிய தகவல்கள் சேமித்து வைத்தால் அதை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். மேலும் பணம் பரிமாற்றம், தகவல் பரிமாற்றம் செய்யும்போது மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். செல்போன் மூலம் நிறைய மோசடிகள் நடக்கிறது. அப்படி நடந்தால் உடனே சைபர்கிரைம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும்.
சமீப காலத்தில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகமாக நடந்து வருகின்றன. சமூக வலைத்தளங்கள் மூலம் அறிமுகம் தெரியாத நபர்கள் காதலிப்பதாக கூறி பெண்களை ஏமாற்றுகிறார்கள். இதை தடுப்பதற்கு குழந்தைகள், மாணவ மாணவிகள் செல்போனை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்று பெற்றோர்கள் கண்காணித்து அவர்களுக்கு பாதிப்பு வராதபடி தடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.