மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே பராமரிப்பின்றி காணப்படும் குடிநீர் தொட்டியை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மணல்மேடு அருகே ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு நடுதிட்டு மெயின் ரோட்டில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. அதே பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த குடிநீர் தொட்டியை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் பல ஆண்டுகளாக இந்த குடிநீர் தொட்டி பராமரிப்பு இன்றி காட்சி பொருளாக காணப்படுகிறது. மேலும் குப்பைகளும் குடிநீர் தொட்டியை சுற்றி காணப்படுகிறது.
இதனால் குடிநீர் இல்லாமல் அதே பகுதியை சேர்ந்தவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். கோடை காலத்தில் குடிநீர் பெரும் தேவையாக அமையும். எனவே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குடிநீர் தொட்டியை சீரமைத்து பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும். மேலும் குடிநீர் தொட்டியை சுற்றிக் கிடக்கும் செடி கொடிகள் மற்றும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.