திண்டுக்கல்லில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோட்டைக்காரன்பட்டியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடம் ஒன்று ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கடந்த ஆறு வருடங்களாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்ததையடுத்து நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றுவதற்காக கோட்டைக்காரன்பட்டி கிராமத்திற்கு நேற்று முன்தினம் வந்துள்ளனர்.
ஆனால் அங்கு வந்த அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் திரும்பி சென்று விட்டதால், கோபமடைந்த பொதுமக்கள் திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அந்த கிராம மக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இதையடுத்து நெடுஞ்சாலை துறையினர் அங்கு வந்து தர்ணாவில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.