காரில் செம்மரக்கட்டைகளை கடத்தியவர்கள் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கல்லியூர் தரகப்பனூர் வட்டம் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்த முயன்றனர். அப்போது அதே வழியாக வந்த சொகுசு கார் நிலைதடுமாறி பள்ளத்தில் இறங்கி மரத்தின் மீது மோதி நின்றது. உடனடியாக கார் ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதனை பார்த்த போலீசார் காரில் சோதனை நடத்தினர்.
அதில் 260 கிலோ எடையுள்ள 8 செம்மரக்கட்டைகளை கடத்தியது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் சொகுசு கார் மற்றும் செம்மரக்கட்டைகளை மீட்டு நாட்டறம்பள்ளி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதனை அடுத்து வாணியம்பாடி வனத்துறை அலுவலர் இளங்கோவிடம் கார் மற்றும் செம்மரக்கட்டைகள் ஒப்படைக்கப்பட்டது.இது குறித்து வழக்குபதிவு செய்த வனத்துறையினர் தப்பி ஓடிய கார் ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.