சரக்கு வேன் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டியில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கோபிநாத்(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லேகா பாய்(25) என்ற மனைவியும், நிஷா(2) என்ற மகளும் இருக்கின்றனர். இதில் கோபிநாத் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு அருகே இருக்கும் சிப்காட்டில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கோபிநாத் கோவையில் இருக்கும் தனியார் நிறுவனத்திற்கு சிப்காட்டில் இருந்து சரக்கு வேனில் காய்கறிகளை ஏற்றி கொண்டு சென்றுள்ளார்.
இவர் மதுரை- திண்டுக்கல் நான்கு வழி சாலையில் கலிக்கம்பட்டி பகுதியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கோபிநாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கோபிநாத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.