கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரிகையிலிருந்து சூலகிரி நோக்கி 25 பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது.இந்த பேருந்தை கார்த்திக் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் அத்திமுகம் பகுதியில் இருக்கும் வளைவில் திரும்பும் போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்துக்குள்ளான பேருந்தை அப்புறப்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.