கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் தொழிலாளி பலியான நிலையில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து 25 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று குமுளி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கருணாநிதி காலனி அருகே சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி கூலித் தொழிலாளியான கிருஷ்ணமூர்த்தி(50) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாடசாமி(54), வீராசாமி(60), காளியம்மாள்(65), பெருமாள்(66), மலர்விழி(32) ஆகிய 5 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் உயிரிழந்த கிருஷ்ணமூர்த்தியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.