லாரி கவிழ்ந்த விபத்தில் 250 வாத்துகள் உயிரிழந்தது.
கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலையில் வாத்து வியாபாரியான மேரி என்பவர் வசித்து வருகிறார். இவர் குச்சனூரில் இருந்து 2500 வாத்துகளை விலைக்கு வாங்கியுள்ளார். இந்நிலையில் குளித்தலையை சேர்ந்த ரஞ்சித் என்பவர் லாரியில் வாத்துகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தார். அவருடன் மேரி அவரது, மகன் செல்வகுமார் ஆகியோர் இருந்தனர். அதேநேரம் சபரிமலையில் இருந்து சென்னை நோக்கி கார் வந்து கொண்டிருந்தது. அந்த காரை புருஷோத்தமன் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். அதில் 3 பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சேடப்பட்டி அருகே சென்றபோது புருஷோத்தமன் ரஞ்சித் ஓட்டி சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றார்.
அப்போது எதிரே ஒரு கார் வந்ததால் அதன் மீது மோதாமல் இருப்பதற்காக புருஷோத்தமன் காரை இடது புறமாக திருப்பிதால் கார் லாரி மீது உரசியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் 250 வாத்துகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரஞ்சித், மேரி, செல்வகுமார் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.