கர்நாடக அரசு பள்ளிகளில் பகவத் கீதை பாடத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அம்மாநில கல்வித்துறை மந்திரி அறிவித்துள்ளார்.
கர்நாடக பள்ளிக்கல்வித் துறை மந்திரி பி.சி நாகேஷ் கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பகவத் கீதை குறித்த பாடங்களை கற்பிக்க திட்டமிட்டு இருப்பதாக கூறியுள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பள்ளிகளில் நீதி வகுப்புகள் நடத்தும் நடைமுறை சில காலங்களாக பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டது. மேலும் அவற்றை மீண்டும் தொடங்க பெற்றோர்கள் பலர் விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மாணவர்களுக்கு நற்சிந்தனைகளை வழங்கும் வகையில் பகவத் கீதை, ராமாயணம், மகாபாரதம் போன்றவை பாடத்திட்டத்தில் வைப்பது குறித்து கல்வி நிபுணர்களுடன் கருத்து கேட்கப்படும், எனவும் அதன் பின் முதல் மந்திரியுடன் ஆலோசனை நடத்தி இது பற்றி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். அதே சமயம் நடப்பு கல்வியாண்டில் பகவத்கீதை பாடத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை.
மேலும் அடுத்த கல்வியாண்டு முதல் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். ஏற்கனவே குஜராத் மாநில அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கட்டாய ஆங்கில பாடமும், 6 முதல் பகவத் கீதை பாடமும் அறிமுகப்படுத்தப்படும் என அம்மாநில கல்வி துறை மந்திரி ஜித்து வகானி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.