தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம் வந்த நல்லூரை அடுத்த பாஞ்சாங்குளம் கிராமத்தில் எஸ்சி சமூகத்தினரை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு தின்பண்டம் தரக்கூடாது என ஊர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாக பெட்டிக்கடை உரிமையாளர் ஒருவர் பேசும் வீடியோ வெளியானதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் பாஞ்சாங்குளத்தில் இருக்கும் அரசு பள்ளியில் எஸ்சி மாணவர்களை பெஞ்ச் மீது அமர விடாமல் தரையில் உட்கார செய்கிறார்கள் என்பதும் அவர்கள் சத்துணவு சாப்பிட தட்டு தரப்படுவதில்லை என்பதும் தெரிய வந்திருக்கிறது. இந்த சூழலில் தேசிய ஆலோசனை குழு பரிந்துரைகளை செயல்படுத்துவதற்கும் சாதிய பாகுபாடற்ற சூழலை பள்ளி வளாகங்களில் ஏற்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு விழுப்புரம் எம்பி ரவிக்குமார் கடிதம் எழுதி இருக்கிறார்.
இது பற்றி அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் பள்ளி கல்வி எதிர் கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக ஜாதியை பாகுபாடு இருப்பதை பாஞ்சாங்குளம் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றது என தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த சில வருடங்களில் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த சாதிய பாகுபாடு தொடர்பான சம்பவங்களையும் தனது கடிதத்தில் அவர் பட்டியலிட்டு இருக்கிறார். இந்த நிலையில் பாகுபாடுகள் பற்றி ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் மாணவர்களிடையே பாகுபாட்டு உணர்வுகளை களைவதற்குமான செயல் திட்டம் ஒன்றை பள்ளி கல்வித்துறையில் உருவாக்க வேண்டும் எனவும் ரவிக்குமார் எம்பி வலியுறுத்தி இருக்கிறார். பள்ளிகளில் நிலவும் பாகுபாடுகள் களையப்பட வேண்டும் என்பதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்தபோது சோனியா காந்தி தலைமையில் செயல்பட்ட தேசிய ஆலோசனை குழு ஒரு துணை குழுவை அமைத்து சில பரிந்துரைகளை ஒன்றிய அரசுக்கு அளித்துள்ளது. அந்த பரிந்துரைகள் மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டது ஆனால் அப்போது இருந்த அதிமுக தலைமையிலான அரசு அவற்றை நடைமுறைப்படுத்தவில்லை எனவும் தனது கடிதத்தில் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார். இந்த நிலையில் தேசிய ஆலோசனைக் குழு அளித்துள்ள பரிந்துரைகளின் அம்சங்கள் ஆவன
1. ஒன்றிய அரசின் கல்வித் துறை மாநில அரசுகளுடன் இருந்து கல்வி வளாகங்களில் நிலவும் பாகுபாடுகள் எவை என்பதை வலியுறுத்தல் மேலும் சமத்துவ பிரகடனம் ஒன்றை உருவாக்குதல் பள்ளிகளுக்கான நடத்தை விதிகளை தயாரித்தல் கல்வி வளாகங்களில் பன்மை துவத்தை பேணுவதற்கான கட்டமைப்பை உருவாக்குதல்
2.பாகுபாடுகளை களைவதற்கும் சமூக விளக்கம் மற்றும் உள்ளடக்கம் போன்றவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஏதுவாக ஆசிரியர் கல்வியில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல்.
3.பாகுபாடுகளை எதிர் விளைவு ஏற்படாமலும் விளம்பரம் இல்லாமலும் குறிப்பிட்ட காலக்கெடுக்குள் தீர்க்கும் வழிமுறைகளை கண்டறிதல் அதற்காக பள்ளி மேலாண்மை குழுவினருக்கு பயிற்சி அளித்தல், பிரச்சனைகள் இருந்தால் அவற்றை தீர்ப்பதில் உள்ளூர் சிவில் சமூகத்தை ஈடுபடுத்துதல்.
4. நடைமுறையில் உள்ள பல வகையான பாகுபாடுகள் வரையறுக்க வேண்டும் ஆசிரியர்களோ பள்ளி ஊழியர்களோ விதிகளை மீறினால் பணி விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பள்ளிகளில் பாகுபாடுகள் பற்றிய தகவல் வெளியானால் மாநில குழந்தைகள் உரிமை ஆணையம் தானே முன்வந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
என்பதை தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் எம்பி இந்த பரிந்துரைகளை செயல்படுத்துவதற்கும் சாதிய பாகுபாடும் சூழ்நிலை பள்ளி வளாகங்களில் ஏற்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை கடிதம் வாயிலாக கேட்டுக் கொண்டிருக்கிறார்.