தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான இறுதித் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு அதற்கான முடிவுகள் ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்டன. இந்த 10 மற்றும் 12 ம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 25ஆம் தேதி முதல் துணைத்தேர்வு நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்து அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு அவரவர் பயின்ற பள்ளிகளில் மாலை நேர சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும். சிறப்பு வகுப்புகள் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.