நீரின் முக்கியத்துவம் உணர்ந்து கர்நாடக மாநிலத்தில் பள்ளி கல்வித் துறை மந்திரியாக இருந்த சுரேஷ் குமார் சென்ற 2019-ம் வருடம் மாநிலத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் “வாட்டர் பெல்” அடிக்கவேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். நாளொன்றுக்கு காலை 10.35 மணி, பகல் 12 மணி, மதியம் 2 மணி என 3 முறை “வாட்டர் பெல்” அடிக்க வேண்டும் எனவும் அந்த நேரத்தில் 5 நிமிடங்கள் குழந்தைகளை தண்ணீர் குடிக்க ஆசிரியர்கள் அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்த அடுத்தசில மாதங்களில் கொரோனா காரணமாக பள்ளிகள் 2 வருடங்கள் வரை மூடப்பட்டது.
கொரோனாவுக்கு பின் நடப்பு கல்வியாண்டு சென்ற ஜூன் மாதம் தொடங்கி எந்த இடையூறுமின்றி வகுப்புகள் திட்டமிட்டப்படி நடந்து வருகிறது. எனினும் பள்ளிகளில் “வாட்டர் பெல்” விஷயத்தை ஆசிரியர்கள் மறந்து விட்டனர் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் நீண்டநேரம் தண்ணீர் குடிக்காமல் இருப்பதால் உடலில் நீர்ச்சத்தானது குறைந்து குழந்தைகள் உடல் ரீதியாக சோர்வடைந்து விடுவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக அரசு-தனியார் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டத்தை நடைமுறைபடுத்துவதை தீவிரப்படுத்த வேண்டும் என பெற்றோர் கூறியுள்ளனர்.