தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனிடையே பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கு கொரோனா உறுதியானதால் இரண்டு பள்ளிகளுக்கும் மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொட்டார குடியில் உள்ள பள்ளியில் 3 மாணவர்கள், மன்னார்குடி பைங்காநாடு பள்ளியில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், இரு பள்ளிகளுக்கும் இன்று முதல் சனிக்கிழமை வரை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி உத்தரவிட்டுள்ளார்.