தமிழகத்தில் கொரோனா பரவல், ஓரளவிற்கு கட்டுக்குள் இருந்தாலும் இன்னும் முழுமையாக குறையவில்லை. எனவே வருகிற அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை தமிழக அரசு ஊரடங்கை நீட்டித்துள்ளது. அதே வேளையில் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடரவும் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் கூடுதலாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் திருவிழாக்கள், அரசியல் கலாச்சார நிகழ்வுகள் போன்றவற்றுக்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. மேலும் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் நெல்லை மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பள்ளி திறப்பு என்பது காலத்தின் கட்டாயம். பள்ளிகள் திறப்பதற்கு முன்பு தமிழக அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தாத மாணவர்களை வைத்து பள்ளியை திறக்கும் போது, கோவிலுக்கு வருபவர்களில் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி செலுத்தி இருக்கும் நிலையில், வெள்ளி, சனி, ஞாயிறு கோவில்கள் மூடி இருப்பது குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் ஒரு சாராருக்கு மட்டுமே அரசு ஆதரவாக செயல்படக் கூடாது எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.