தமிழகத்தில் தனியார் பள்ளி நிர்வாகங்கள் எழுத்துப்பூர்வமான ஒப்புதல் பெறாத வரையில் பள்ளிகளை திறக்க கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பொங்கலுக்கு பிறகு ஜனவரி 19 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கள் முதல் சனி வரை வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் கட்டாயமாக கவசங்களை அணிய வேண்டும். பள்ளி மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே சுற்றித் திரிய அனுமதிக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தனியார் பள்ளி நிர்வாகங்கள் எழுத்துப்பூர்வமான விருப்பத்தை அதிகாரிகளுக்கு அளித்த ஒப்புதல் பெறாத வரை தங்கள் பள்ளிகளை திறக்க கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது. பெற்றோரின் சம்மதம் இருந்தால் மட்டுமே மாணவர்களை அழைக்க வேண்டும். வீட்டில் படிக்க விரும்பும் மாணவர்களின் கற்றல் விளைவுகள் முன்னேற்றத்திற்கு தக்க முறையில் திட்டமிட வேண்டும் என கூறியுள்ளது.