தமிழகத்தில் மீண்டும் கொரோனாபரவல் அதிகரித்து வருவதால் பள்ளிகளில் நேரடி வகுப்புகளை கைவிட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதில் சென்னையில் தினசரி கொரோனா தொற்று நேற்று ஒரு நாளில் மட்டுமே 120 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் சென்னை, வேலுர், விழுப்புரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவ தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.
அதன்படி இந்தியாவில் அந்த வைரஸ் கால் பதித்துள்ளது. இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 80% பேர் 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதற்காக டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பல மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த ஒன்றரை வருடங்களாக கல்வி நிறுவங்கள் சரியாக நடக்காத நிலையில் இந்த ஆண்டில் மாணவர்களின் கல்வி பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதற்காக நேரடி வகுப்புகள் தான் சரியானது.
ஆனால் அதிகரித்து வரும் ஒமைக்ரான் பரவலால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக நேரடி வகுப்புகள் கைவிட வேண்டும். எனவே தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும். மேலும் தமிழகம் முழுவதும் கொரோனா சோதனைகள், மற்றும் தடுப்பூசி செலுத்துவத்தும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். அது மட்டும் இல்லாமல் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்த்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல் உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.