தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி நாளை முதலமைச்சர் அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் இன்று தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளில் அரசு பள்ளி மாணவர்கள் 16,300 பேர் சேர்ந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. இருந்தாலும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் முக்கிய நிலைப்பாடு. மேலும் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
அதனால் இந்த வருடம் மேலும் கூடுதலாக 5,18,000 மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர். அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் தேவையான சீருடைகள் மற்றும் ஷூ சாக்ஸ் ஆகியவை தயார் நிலையில் உள்ளன. அவை விரைவில் மாணவர்களுக்கு வழங்கப்படும். பள்ளிகள் திறப்பது பற்றி நடத்தப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் 45 சதவீத பெற்றோர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்” என்று அவர் கூறியுள்ளார்.