பள்ளியில் மாணவ மாணவிகள் முன்பு சண்டை போட்ட தலைமை ஆசிரியர் உள்பட 2 பேரை பணியிடை மாற்றம் செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பெருமாப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோதிக்கும், இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வரும் ராஜேஸ்வரி என்பவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் பள்ளியில் மாணவ மாணவிகள் முன்னிலையில் சண்டை போட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதி 5ஆம் வகுப்பு மாணவியை திட்டியதாகவும் கூறப்படுகிறது. எனவே இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் மாவட்ட கல்வி அலுவலர் ராமன் மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு சென்று சக ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது தலைமையாசிரியர் ஜோதிக்கும் இடைநிலை ஆசிரியர் ராஜேஸ்வரிக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் நடைபெற்றும் என தெரியவந்துள்ளது. இதனால் மாணவர்களின் நலன் பாதிக்கப்படுவதால் இரண்டு பேரையும் வெவ்வேறு பள்ளிகளுக்கு பணியிடை மாற்றம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் ராமன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தலைமையாசிரியர் ஜோதியை கரட்டுபட்டி பள்ளிக்கும் ஆசிரியை ராஜேஸ்வரியை கொடிக்கால்புதூர் பள்ளிக்கும் மாற்றியுள்ளனர்.