நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா பகுதியில் காட்டுயானைகள் பொதுமக்கள், விவசாயிகளின் உடைமைகளை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது. ஓவேலி பேரூராட்சி அலுவலகம், அரசு தொடக்கபள்ளி, நூலகம், தபால் நிலையம் போன்றவை ஒரே வளாகத்தில் இயங்கி வருகிறது. சென்ற வாரம் காட்டுயானைகள் வளாகத்துக்குள் புகுந்து, பேரூராட்சி அலுவலகத்தில் பொருட்கள் இருப்பு வைக்கும் அறைகளை உடைத்தது. அத்துடன் பள்ளியிலிருந்த பொருட்களை சேதப்படுத்தியது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு காட்டுயானைகள் கூட்டம் அப்பகுதிக்குள் நுழைந்தது.
அதன்பின் காட்டுயானைகள் பேரூராட்சி அலுவலக பொருட்கள் இருப்புவைக்கும் அறைகள், அரசு பள்ளி, நூலகம், தபால் நிலையத்துக்குள் புகுந்து 2வது முறையாக சூறையாடியது. இவற்றில் பள்ளி வகுப்பறை சுவர் இரண்டாக பிளந்து, எந்நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் இருக்கிறது. இதன் காரணமாக மாணவர்கள், ஆசிரியர்கள் அந்த அறையை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதேபோன்று பேரூராட்சி அலுவலக அறைகளும் பலத்த சேதமடைந்தது. இவ்வாறு காட்டுயானைகளின் தொடர் தாக்குதலால் பொதுமக்கள் மட்டுமல்லாது பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஓவேலி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சேதமடைந்த கட்டிடங்களை பார்வையிட்டனர். அதனை தொடர்ந்து பேரூராட்சிமன்ற தலைவர் சித்ராதேவி, செயல் அலுவலர் ஹரிதாஸ், துணைத் தலைவர் சகாதேவன் மற்றும் கவுன்சிலர்கள், காட்டுயானைகள் வருவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வனத்துறையிடம் கோரிக்கை விடுத்தனர். அப்போது உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக வனத்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதேபோன்று தேவர் சோலையிலுள்ள ரேஷன் கடையை ஒரு காட்டு யானை முற்றுகையிட்டது. அதன்பின் கடையின் கதவை உடைத்து அங்கு இருந்த பொருட்களை தின்று விட்டு சென்றது.