நர்சரி பள்ளி தாளாளரை கொலை செய்து நகைகளை திருடி சென்ற வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டதிலுள்ள மதகுபட்டி அருகே கட்டாணிபட்டியில் 64 வயதுடைய சத்தியமூர்த்திஎன்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் நர்சரி பள்ளியில் தாளாளராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு சத்தியமூர்த்தி தனது மோட்டார் சைக்கிளில் ஓடப்பட்டி கம்மாய் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கார் ஓட்டுனரான வாசுதேவன் என்பவர் நண்பரான வீரபாண்டியுடன் இணைந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சத்தியமூர்த்தியை கட்டையால் அடித்துள்ளார். இதனால் நிலைதடுமாறி சத்தியமூர்த்தி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனையடுத்து வாசுதேவனும், வீரபாண்டியும் சத்தியமுர்த்தி அணிந்திருந்த 7 பவுன் தங்கநகையை பறித்துவிட்டு தப்பிச்சென்றனர்.
இதனைத்தொடர்ந்து படுகாயமடைந்த சத்தியமூர்த்தியை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சத்தியமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வாசுதேவன் மற்றும் வீரபாண்டியை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த சிவகங்கை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட வாசுதேவனுக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் வீரபாண்டிக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.