கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பள்ளியில் முன்கூட்டியே மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து வசூலித்த கட்டணத்தை திரும்ப அளிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய கல்வித் துறை அமைச்சரிடம் எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். அதில் 11ம் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு முதல் காலாண்டுக்கும், இரண்டாவது காலாண்டில் ஒன்றறை மாதத்துக்கும் சேர்த்து ரூ.3150 கல்வி கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆகஸ்ட் மாதத்தில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு ஏப்ரல் மாதத்திலிருந்து கல்வி கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி பதினோராம் வகுப்பில் சேராத காலத்தில் டியூஷன் கட்டணம், வித்யாலயா விகாஸ் நிதி கட்டணம், கணினி அறிவியல் கட்டணம் என்று வசூலிக்கப்பட்டு ரசீது கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பெற்றோர்கள் சிலர் என்னை தொடர்புகொண்டு புகார் தெரிவித்தனர். பள்ளிகளில் கல்வி நடவடிக்கைகள் எதுவுமே இல்லாத காலத்தில் கட்டணம் என்பது தேவை கிடையாது. இது முறையல்ல. எனவே பெற்றோர்களின் புகார் நியாயமானது. எனவே இந்த கட்டணத்தை திருப்பி தர வேண்டும் இல்லாவிட்டால் எதிர்காலத்தில் கட்டணத்தை நேர் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.