தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு வரும் சம்பவம் அதிக அளவு நடந்து கொண்டிருக்கிறது. அதனால் ஒரு சில மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் மாணவிகள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. அதற்காக அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்கப்பட்டது.
இந்நிலையில் போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வை தனியார் பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிக்கு அவப்பெயர் ஏற்படும் என்று கருதி பாலியல் புகார்களை பள்ளிகள் மூடி மறைக்க கூடாது. மாணவர்களுக்கு ஆலோசனை மற்றும் புகார் தெரிவிக்க உருவாக்கப்பட்டிருக்கும் 14417 என்ற உதவி எண் பாடப்புத்தகங்களின் முதல் பக்கத்தில் அச்சிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.