வங்காளதேசத்தில் தற்போது மின்சார பற்றாக்குறை இருப்பதால், அந்நாட்டு அரசு மின்சார தட்டுப்பாட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகி றது. அதன் ஒரு பகுதியாக வணிக நிறுவனங்கள், கடைகள் போன்றவற்றை இரவு 8 மணிக்கு மூடிவிட வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவானது மின்சாரத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் நாளை முதல் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் போன்றவைகள் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே செயல்படும். இதேபோன்று அனைத்து வங்கிகளும் காலை 9 மணி முதல் 4 மணி வரை மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் போன்றவைகள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் படி நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் புதிதாக பள்ளி மற்றும் கல்லூரிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் எப்போது இருந்து நடைமுறைக்கு வரும் என்பதை பள்ளி கல்வித்துறை முடிவெடுக்கும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், சனி மற்றும் ஞாயிறு என 2 தினங்களும் விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பிரதமர் ஷேக் ஹசீனா காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற மந்திரி சபை கூட்டத்தின் போது கூறினார்.