இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காலையில் பிரார்த்தனையின் போது தேசிய கீதம் பாடப்படுவது வழக்கம். ஆனால் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சில தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காலப்பிரார்த்தனையின் போது மாணவர்கள் தேசிய கீதம் பாடவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளது. இந்த புகாரின் பேரில் பெங்களூருவில் உள்ள அனைத்து தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கும் சென்று விசாரணை நடத்தப்பட்டது. அதன் படி பெங்களூர் வடக்கு மற்றும் தெற்கு பிரிவுகள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்று பொது கல்வித் துறையின் துணை இயக்குனர் சோதனை மேற்கொண்டார். அப்போது காலை பிராத்தனையின் போது மாணவர்கள் தேசிய கீதம் பாட வில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் கர்நாடக கல்வி சட்டத்தின் 133 (2) பிரிவின் கீழ் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவிற்கான அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கட்டாயமாக மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்கள் அனைவரும் தினமும் காலை பிரார்த்தனையின் போது தேசிய கீதம் பாட வேண்டும் என்று கர்நாடகா அரசு அறிவித்துள்ளது. பொது பிராத்தனைக்கு போதிய இடம் இல்லையென்றால் வகுப்பறையில் காலையில் தேசிய கீதம் பாட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பின்படி பள்ளிகள், கல்லூரிகள் அரசு மற்றும் தனியார் அலுவலகம், தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் காலை 11 மணிக்கு தேசிய கீதம் பாடுபட்டு வருகிறது.