Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளி மாடியில் இருந்து குதித்த மாணவி…. உறவினர்கள் சாலை மறியல்…. நாமக்கலில் பரபரப்பு….!!

பள்ளி மாடியில் இருந்து குதித்து 9-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள சீத்தாராம்பாளையம் பகுதியில் வசித்து வரும் சங்கருக்கு(45) என்பவருக்கு சந்தனமாரி (35) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது மகள் திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மதியம் 02.30 மணியளவில் பள்ளியில் இருந்த மாணவி திடீரென வாந்தி வருவதாக கூறி வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து அவர் பள்ளியின் 2-வது மாடிக்கு சென்று திடீரென மேலே இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதில் கீழே மாற்றுத்திறனாளிகள் செல்வதற்காக அமைக்கப்பட்ட சாய்தளத்தின் கைப்பிடி மேலே விழுந்து மாணவி படுகாயமடைந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உடனடியாக மாணவியை திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக இறந்துள்ளார். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு திருச்செங்கோடு காவல்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இதற்கிடையே உயிரிழந்த மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பாஜகவை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் மாணவி படித்த பள்ளியின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி சரோஜ் குமார் தாக்கூர் மாணவியின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது அவர்கள் அந்த பள்ளியில் வேலை பார்க்கும் தமிழாசிரியர் அருள்செல்வி காரணமின்றி மாணவியை தவறாக திட்டியதாகவும் வகுப்பறை லீடர் பொறுப்பில் இருந்து நீக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். எனவே ஆசிரியர் அருள்செல்வியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என  கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

இதனையடுத்து போலீசார் கூறியும் பெற்றோர் மற்றும் பாஜகவினர் சாலை மறியலை கைவிடாததால் அங்கிருந்த பாதுகாப்பு படையினர் அவர்களை கலைத்துள்ளனர். இதனைதொடர்ந்து மாணவியின் பெற்றோர் திருச்செங்கோடு நகர காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |