சென்னை வளசரவாக்கம் இளங்கோநகா் காளியம்மன் கோவில் தெருவில் வெற்றிவேல்-ஜெனிபா் என்ற தம்பதியின் வசித்து வருகின்றனர். இவர்களின் மகன் தீக்ஷித்(8) ஆழ்வாா்திருநகரிலுள்ள ஒரு தனியாா் பள்ளியில் 2ம் வகுப்பு பயின்று வந்தாா். சென்ற 28-ஆம் தேதி பள்ளி வளாகத்துக்குள் தீக்ஷித் வேனை விட்டு கீழே இறங்கி நிற்கும்போது அவா் மீது அந்த வேன் மோதி விட்டது. இதனால் சிறிது நேரத்தில் தீக்ஷித் பரிதாபமாக இறந்தாா். அதன்பின் வளசரவாக்கம் காவல்துறையினர், வேன் ஓட்டுநா் பூங்காவனம், குழந்தைகள் கவனிப்பாளா் ஞானசக்தி, பள்ளித் தாளாளா் ஜெய சுபாஷ், முதல்வா் தனலட்சுமி போன்றோர் மீது வழக்குப்பதிவு செய்தனா்.
இவா்களில் பூங்கா வனம் மற்றும் ஞானசக்தி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா். இவ்வழக்கின் விசாரணையை விரைவுபடுத்தும் அடிப்படையில் பள்ளித் தாளாளா் ஜெய சுபாஷிடம் சுமாா் 12 கேள்விகள் கேட்டு காவல்துறை கடந்த வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அளித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நோட்டீஸுக்கு இருநாட்களில் பதில் அளிக்குமாறு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி முதல்வர் மற்றும் போக்குவரத்து குழு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளி நிர்வாகத்திற்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.