இந்தியாவில் கடந்த 1947-ம் வருடம் ஆகஸ்ட் 15ஆம் தேதி நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரத்தை தலைவர்கள் போராடி வாங்கி கொடுத்த சூழ்நிலையில், அதை வருடந்தோறும் கொண்டாடுவது ஒவ்வொருவரின் கடமை ஆகும். இந்த நிலையில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு மத்திய அரசு சார்பாக 13 -18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு விநாடி வினா போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது. இப்போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு ரூபாய்.10 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநகரம் சார்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது.
அவற்றில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு மத்திய பெட்ரோலியம் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம் சார்பாக 13 -18 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு இந்திய பாரம்பரியம் பற்றிய விநாடி வினா போட்டி நடத்தப்பட உள்ளது. இதுகுறித்த விபரங்கள் www.akamquiz.com எனும் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. மாவட்ட அளவில் நடத்தப்படும் போட்டியில் வெற்றிபெறுபவர்கள் மாநில அளவில் நடக்கும் போட்டிக்கு தகுதி பெறுவார்கள். அதனை தொடர்ந்து மண்டல மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் நடைபெறும். பின் இறுதிபோட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் ரூபாய்.10 லட்சம் கல்வி உதவித்தொகைக்கு தகுதி பெறுவார்கள்.
அத்துடன் மொத்தமாக ரூபாய் 55 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இந்த விநாடி வினா போட்டியானது 17 மொழிகளில் நடைபெற இருக்கிறது. நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியத்தை இளம் தலைமுறையினரிடம் எடுத்து செல்வதே இப்போட்டியின் நோக்கம் ஆகும். ஆகவே மாணவர்கள் இதில் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களின் விபரங்களை பள்ளி கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.