தமிழகத்தில் சென்ற 2 வருடங்களாகவே கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் எதுவும் திறக்கப்படாமல், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது. இப்போது தமிழகத்தில் சற்று கொரோனா தொற்று குறைய ஆரம்பித்துள்ளதால் மீண்டும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களாக பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் ஏதும் நடத்தப்படாமல் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த வருடம் கட்டாயம் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. அந்த வகையில் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையும் அண்மையில் வெளியாகியது.
ஆகவே பொதுத் தேர்வுக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால் மாணவர்களுக்கு பாடத் திட்டங்கள் வெகு விரைவாக நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையில் பாடத்திட்டங்கள் ஏதும் முடிக்காத காரணத்தினாலும், 2 வருடங்களுக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதாலும் அனைத்து சனிக்கிழமையும் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட சிறப்பு அவசர செயற்குழுக் கூட்டம் எஸ்.சந்திரசேகர் தலைமையில் தமிழக அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தின்போது சனிக்கிழமையும் பணிநாளாக இருப்பது மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மிகுந்த மன உளைச்சலை கொடுக்கிறது.
இதன் காரணமாக சனிக்கிழமையும் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டுமென ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஆங்கிலவழி கல்வி இல்லாத உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி தொடர வேண்டும். மேலும் 6 -10 ஆம் வகுப்பு வரை ஆங்கிலவழி கல்வி உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் 11 ஆம் வகுப்புக்கான ஆங்கில வழி கல்வியை தொடங்க வேண்டும் என்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். அதுமட்டுமின்றி புது ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வீட்டு வாடகைப்படியை உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்