திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்தியா முழுவதும் இளநிலை படிப்புகளில் சேருவதற்காக 45 மத்திய பல்கலைக்கழகங்களில் கட்டாய பொது நுழைவுத்தேர்வு இந்த கல்வி ஆண்டு முதல் நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஒன்றிய அரசு மாணவர்களின் மீது தொடுத்துள்ள அடுத்தகட்ட தாக்குதலாகும். சுமார் மூன்றரை மணி நேரம் நடக்க உள்ள இந்த தேர்வில் பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து அனைத்து கேள்விகளும் கேட்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே என்சிஇஆர்டி பாடநூல்களில் மாணவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று யூஜிசி குறிப்பிட்டுள்ளது. மேலும் மத்திய பல்கலைக்கழகங்களுக்கான மாணவர் சேர்க்கையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெறும் மதிப்பெண்களுக்கு வெயிட்டேஜ் வழங்கப்படாது என்றும் அறிவித்துள்ளது. இது குலக்கல்வியை மீண்டும் கொண்டு வரும் திட்டத்தின் புதிய அவதாரமாக உள்ளது. 12ஆம் வகுப்பில் பெறும் பொதுத் தேர்வு மதிப்பெண்களை மதிப்பற்ற எண்களாக்கும் இந்த புதிய போக்கு சமூக நீதியின் அடி வேரை கல்வித்துறை வெட்டுவது ஆகும்.
மேலும் ஏழை, எளிய மக்களை உயர் கல்வியில் இருந்து துரத்தி அடிக்கவும், கார்ப்பரேட் பயிற்சி மையங்கள் கொள்ளையடிக்கவும் திட்டமிட்டு இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. தனியார் பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் இந்த தேர்வை பயன்படுத்தி கொள்ளலாம் என்ற அறிவிப்பானது அனைத்து கல்லூரிகளுக்கும் இந்த நுழைவுத்தேர்வை விரிவாக்கும் சதித்திட்டத்தின் ஒரு பகுதி ஆகும். எனவே இதனை ஆரம்பத்திலேயே ஒழித்துக் கட்ட வேண்டியது அவசியம். “நீட்” என்னும் தடை மருத்துவ கல்விக்கு சுவரை எழுப்பியுள்ளது போன்று, இந்த சியுஇடி நுழைவுத்தேர்வு கல்லூரி கல்விக்கு பெரும் தடையாக உள்ளது.
மேலும் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களிடம் இருந்து முனைவர் பட்டம் ஆய்வு மாணவர்களை தேர்வு செய்யும் உரிமையை பறிக்கும் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில் திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ள திருவாரூரில் வரும் 31-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மனுதர்ம ராஜ்யத்தை நடத்தி மீண்டும் ஆர்எஸ்எஸ்சும், ஆரியமும் நமது கல்வி கண்களை குத்த வருகின்றன. அதனை ஒரு போதும் அனுமதிக்க இயலாது” என்று கி.வீரமணி கூறியுள்ளார்.