பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி தொடர்பாக அமைச்சர் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :”பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை அடுத்து திமுக ஆட்சியில்தான் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திட்டப் பணிகளுக்கு 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது பக்தர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அமைச்சர்கள் அனைவரும் அவரவர் துறையில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.
மேலும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பை பற்றி முதல்-அமைச்சர் எடுக்கும் முடிவுகளின் படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயாராக உள்ளது. உலக சுகாதார மையம் மற்றும் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தயாராக உள்ளோம். எப்போது அறிவிப்பு வந்தாலும் அதை சிறப்பான முறையில் நிறைவேற்ற அதிகாரிகளும் தயாராக உள்ளனர். தற்போது வரை பள்ளி கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மற்றும் புகார் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது” என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.