நாடு முழுவதும் கொரோனா 3-வது அலை தொற்று பரவல் அதிகரித்து வந்ததை அடுத்து பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மீண்டும் மூடப்பட்டுள்ளது. இதனிடையில் கடந்த சில நாட்களாக டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா நோய் பரவல் குறைந்து வருவதால் இந்த பகுதிகளில் மட்டும் பள்ளிகளை மீண்டும் திறக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளாக உத்தரபிரதேச மாநிலத்தில் மூடப்பட்ட அனைத்து பள்ளிகளும் பிப்ரவரி 15ஆம் தேதி வரை திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உத்தரபிரதேசம் மாநில அரசின் இந்த முடிவானது அதிகரித்து வரும் கொரோனா புதிய பாதிப்புகளை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் அவஸ்தி பிறப்பித்த உத்தரவின்படி, பள்ளிகளை மூடும் நடவடிக்கையானது ஜனவரி 30 (இன்று) முதல் பிப்ரவரி 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் வர இருக்கும் இரண்டாம் நிலை வாரிய தேர்வுகளைக் கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் ஜனவரி 28 ஒரே நாளில் 10,937 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.