புதுச்சேரியில் மார்ச் 3ஆம் தேதி முதல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், பெரும்பாலான மாநிலங்களில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இதனையடுத்து 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வருடம் வகுப்புகள் நடத்தப்படாமல் குறுகியகால வகுப்புகளை கொண்டு மாணவர்கள் தேர்வு எழுத தயாராகி கொண்டிருப்பதால் மாணவர்களுக்கு மனதில் தேர்வு குறித்த அச்சம் உண்டாகியுள்ளது. தமிழகத்தில் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் இல்லாமல் ஆல்பாஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் மார்ச் 3ஆம் தேதி முதல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. வழக்கமான கால அட்டவணையை பின்பற்றி திங்கள் முதல் சனி வரை வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களுக்கு அரை நேரம் மட்டுமே வகுப்புகள் நடந்து கொண்டிருப்பதால், மார்ச் 3 முதல் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகளை ஒத்திவைக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆலோசனை நடத்தி வருகிறார்.