மதுரை திருமங்கலத்தில் அடுத்த கீழ உரப்பனூரைச் சேர்ந்த ஆதிசிவன் என்பவருடைய மகன் சிவநிதி. இவர் அங்குள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2015ஆம் வருடம் ஜூன் மாதம் வகுப்பறையை சுத்தம் செய்யும்படி வகுப்பாசிரியர் அந்த மாணவருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி மாணவர் வகுப்பறையை சுத்தம் செய்யும் பொழுது மேசை காலில் விழுந்து பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆசிரியர் சுத்தம் செய்ய கூறியதால் தன்னுடைய மகன் காயமடைந்துள்ளார் எனவும், இது மனித உரிமை மீறல் என்று கூறி ஆதிசிவன் தமிழக மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார்.
இதனை விசாரித்த மனித உரிமை ஆணையம், சுத்தம் செய்ய போதுமான ஊழியர்களை நியமிக்காததற்கு பள்ளியின் தலைமை ஆசிரியையும், வகுப்பாசிரியையும் குறை கூற முடியாது. இதற்கு பள்ளி நிர்வாகம் தான் காரணம் எனவும் கூறி பாதிக்கப்பட்ட மாணவருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும் பள்ளிகளில் வகுப்பறைகள், கழிவறைகளை சுத்தம் செய்வதில் மாணவர்களை ஈடுபடுத்த வில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.