மாணவர்கள் இசை மற்றும் திரைப்பட தயாரிப்பு தொடர்பான விஷயங்களை கற்றுக் கொள்வதற்கு டெல்லி அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
அரசு பள்ளி மாணவர்கள் அனைவரும் பாடப் புத்தகங்களைத் தாண்டி சில திறன்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக டெல்லி அரசு பல வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளது. அதன்படி வருங்கால தலைமுறையினர் இசை தயாரிப்பு, திரைப்பட தயாரிப்பு, கிராபிக் டிசைனிங் உள்ளிட்ட விஷயங்களை தெரிந்து கொள்ளும் வகையில் சிறப்பு பேருந்து ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது இசை பேருந்து என்று அழைக்கப்படுகிறது. மின்சாரமின்றி எட்டு மணி நேரம் இயங்க கூடிய ஸ்மார்ட் டிவி ஒன்று இடம்பெற்றுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மன்ஸில் மிஸ்டிக்ஸ் என்ற அமைப்பு டெல்லி அரசுடன் இணைந்து செய்துள்ளது.
இதனை தொடங்கி வைத்த துணை முதல்வரும் கல்வித்துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா கூறியதாவது: மாணவர்களிடம் ஒளிந்திருக்கும் கலைத் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காக சிறப்பு பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளியை சேர்ந்த 5 ஆயிரம் மாணவர்களை சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் பதினைந்து முதல் இருபது பள்ளிகளுக்கும், பல்வேறு பகுதிகளுக்கும் இந்த இசை பேருந்து செல்கின்றது. பயிற்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படும் இந்த இசை பயிற்சி மூலம் தங்களது வீட்டின் அருகிலேயே மாணவர்கள் இசை பாடங்களை கற்றுக்கொள்ள முடியும்.
அடுத்த ஆண்டு இதே போன்று மேலும் 5 பேருந்தை அறிமுகம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். இசை குறித்து பாடம் எடுப்பது, ரெக்கார்டிங் செய்வது, மேடையில் இசை தொடர்பான திறன்களை வெளிப்படுத்துவது போன்ற அனைத்தும் கற்பிக்கப்படும். குழந்தைகள் இசை கற்க வாய்ப்பு இல்லாத இடங்களில் இந்த இசை பேருந்து அனுப்பி வைக்கப்படும். குடிசை பகுதிகளுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளுக்கும் இந்த இசை பேருந்து அனுப்பி வைக்கப்பட்டு அவர்களுக்கு இசை கற்றுக் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்