சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவியை, அதே பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் வசந்த்கிரீஷ் என்பவர் காதலிப்பதாக கூறியுள்ளார். இவ்வாறு வசந்த்கிரீஷ் நம்பி மாணவியும் அவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவியின் பெற்றோர் வடபழனி மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அந்த புகாரில் மாணவியை அந்த பகுதியைச் சேர்ந்த வசந்த்கிரீஷ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளனர். இதையடுத்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வசந்த்கிரீஷ் உள்ளிட்ட 4 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது விசாரணையில் பள்ளி மாணவியை வசந்த்கிரீஷ் தனது நண்பர்களான துணை நடிகர் சதீஷ்குமார், தனியார் பல் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் பிரசன்னா, கல்லூரி மாணவர் விஷால் ஆகியோருக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அத்துடன் மாணவியை போதைக்கு அடிமையாக்கிய கும்பல், மாணவியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி இவ்விவகாரத்தில் வசந்த்கிரீஷின் கல்லூரி நண்பர்களான 2 மாணவிகளுக்கும், ஒரு பள்ளி மாணவிக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் சேர்ந்து அந்த மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி நண்பர்களின் உல்லாசத்துக்கு இணங்க வைத்ததும் தெரியவந்தது. அதன்பின் இவ்வழக்கில் அவர்கள் 3 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருப்பவர்களை தேடி வருகின்றனர்.