பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிரிக்கெட் பயிற்சியாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுச்சேரி முத்திரையார் பாளையத்தில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு அப்பள்ளியின் கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்து வரும் தாமரைக்கண்ணன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் கிரிக்கெட் பயிற்சி மைய நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் இந்த புகார் குறித்து நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் குழந்தைகள் நல குழுவிடம் புகார் அளித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் போலீசாருக்கு புகார் அளித்தனர். இதனை அறிந்த போலீசார் பயிற்சியாளர் தாமரைக்கண்ணன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த மற்றொரு பயிற்சியாளர் ஜெயக்குமார் கிரிக்கெட் கிளப் முன்னாள் செயலாளர் தாமோதரன், இணைச் செயலாளர் வெங்கட் மற்றும் அவருடைய மகன் ரோகித் ஆகிய 5 பேர் மீதும் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இவர்கள் 5 பேரும் தலைமறைவாக உள்ளதால் இவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.