பள்ளி மாணவி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர் 17 வயது பள்ளி மாணவி. தற்போது கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவி வேறு ஊரிலிருக்கும் தனது பெரியம்மா வீட்டிற்குச் சென்று அங்கு தங்கியுள்ளார். அப்போது, அதே பகுதியில் வசித்து வந்த கல்லூரி மாணவர் அருண்குமார் என்பவருக்கும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அருண்குமார் பள்ளி மாணவியைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் பலமுறை தனிமையில் இருந்துள்ளார்.
இதனால் கர்ப்பமடைந்த மாணவி தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி அருண்குமாரைக் கேட்டுள்ளார். இதற்கு அருண்குமார் மறுப்பு தெரிவித்ததும் மாணவி வேறு வழி இல்லாமல் பெற்றோரிடம் நடந்தவற்றைக் கூறியுள்ளார். அதன் பின் பெற்றோர் இந்த சம்பவம் குறித்து திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில், காவல் ஆய்வாளர் புஷ்பவல்லி, அருண்குமார் மீது வழக்குப் பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளார்.