கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. தினமும் இது தொடர்பான செய்திகள் வந்து கொண்டே இருந்தாலும், தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது.
தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்ரியா, கணித ஆசிரியை கீர்த்திகா போன்றோர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் (பிரிவு 305) பாதுகாப்பில் உள்ளவருக்கு தொல்லை கொடுத்தல் (பிரிவு 75) போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்கள் 5 பேரையும் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாளாளர் ரவிக்குமார் உள்ள 5 பேரையும் போலீசார் ஆஜர் படுத்தினார். அதன்பின் அவர்கள் ஐந்து பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்கும்படி நீதிபதி முகமது அலி உத்தரவிட்டுள்ளார். அதன் பெயரில் அவர்கள் 5 பேரும் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் இருந்து போலீஸ் வேனில் அழைத்துச் செல்லப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.