திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அழகாபுரியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்க தலைமையாசிரியர் உள்பட 8 ஆசிரியர்கள் வேலை பார்க்கும் நிலையில், 155 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இடைநிலை ஆசிரியை ஒருவர் 1- ஆம் வகுப்பு, 2- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்துள்ளார். அவர் மாணவ மாணவிகளை ஆபாச வார்த்தைகளில் பேசி தாக்கியதாக கூறி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் வட்டார தொடக்க கல்வி அலுவலரிடம் புகார் அளித்தனர். இதனால் அந்த ஆசிரியையை கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிட்டனர்.
நேற்று பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் மாற்று ஆசிரியர் நியமிக்கப்படாததால் கோபத்தில் 1- ஆம் வகுப்பு அறையை பூட்டி பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் சகாயமேரி பேச்சுவார்த்தை நடத்தி வேறு ஆசிரியரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.