செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது. அங்கு 20-க்கும் மேற்பட்டோர் தங்கி வேலை செய்துவந்தனர். அதே கட்டிட வேலையில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மாம்பழப்பட்டு கிராமத்தை சேர்ந்த மலர் (45) என்ற பெண் சித்தாளாக வேலை செய்துவந்தார். இந்நிலையில் நேற்று பணி முடிந்து, பள்ளி வகுப்பு அறையில் தூங்க சென்ற மலர் காலை 10 மணி ஆகியும் அறை விட்டு வெளி வராததால், மற்ற தொழிலாளிகள் மலர் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு மலர் ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து காவல்துறையினர் கட்டடத்தில் பணியாற்றியவர்களிடம் விசாரனை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது இறந்த போன மலருக்கும், அவருடன் பணியாற்றிய மாம்பழப்பட்டு பகுதியை சேர்ந்த கரிகாலன் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டு காலமாக தகாத உறவு இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தகாத உறவில் ஏற்பட்ட பிரச்சனையால் மலரை கொலை செய்துவிட்டு கரிகாலன் தலைமறைவாகியிருக்கலாம் என்ற கோணத்தில் கரிகாலனை போலீசார் தேடி வருகின்றனர்.