பள்ளி வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு சிறுமி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் பகுதியில் சஜீப் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு ஹென்சா ரோஸ் (9) என்ற மகள் உள்ளார் இந்த சிறுமி ஒயிட் மெமோரியல் மெட்ரிக் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளி வேனில் வகுப்புக்கு சென்று விட்டு மாலையில் சிறுமி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அந்த வாகனத்தை குணசேகரன் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மார்த்தாண்டம் கிறிஸ்டல் தெரு பூங்காவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக வேனின் அவசர கதவு திறந்ததால் ஹென்சா ரோஸ் சாலையில் தூக்கி வீசப்பட்டார்.
இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த மாணவ மாணவிகள் சத்தம் போட்டதால் வேன் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டார். இந்த விபத்தில் தலையில் படுகாயம் ஏற்பட்ட சிறுமியை பொதுமக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் வேன் ஓட்டுநர் குணசேகரன் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.