பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள குதிரைக்கல்மேடு பகுதியில் மில் தொழிலாளியான மாதையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு திவாகர்(13), ஜீவா(3) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் திவாகர் அரசு உதவி பெறும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் திவாகர் இன்று காலை குதிரைக்கல்மேடு பகுதியில் பள்ளி வேனுக்காக காத்து கொண்டிருந்தார். தொடர்ந்து மற்ற மாணவர்களை ஏற்றி சொல்வதற்காக வேன் கோனேரிப்பட்டி பேரேஜ் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது முன் படிக்கட்டு வாசல் அருகே நின்று திவாகர் பயணித்துள்ளார்.
இந்நிலையில் கோனேரி பேரேஜ் கதவணை மின் நிலைய சோதனை சாவடி அருகே சென்றபோது வேன் ஓட்டுநர் சடன் பிரேக் பிடித்ததால் திவாகர் நிலைதடுமாறி முன்பக்க படிக்கட்டு வழியாக கீழே தவறி விழுந்தார். இதனால் வேனின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற மாணவர்கள் அலறி சத்தம் போட்டதால் நான் ஓட்டுநர் உடனடியாக வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வரைந்து சென்று திவாகரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பள்ளி வாகன ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.