Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

” பழங்குடியின மக்கள் ” தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட சிலைகள்…. ஆர்வத்துடன் வரும் பொதுமக்கள்…!!

பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறைகளை பற்றி தெரிந்து கொள்வதற்காக பொதுமக்கள் ஆர்வத்துடன் அருங்காட்சியகத்துக்கு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி அருகில் முத்தோரை பாலாடாவில் பழங்குடியின மக்களின் வாழ்வியல் பற்றிய ஆராய்ச்சி மையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆராய்ச்சி மையத்தில் அருங்காட்சியகமும் உள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டிலிருந்து இந்த அருங்காட்சியகத்தை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த அருங்காட்சியகத்தை கடந்த டிசம்பர் மாதத்தில் திறந்துள்ளனர். இந்த அருங்காட்சியகத்தில் பழங்குடியின மக்களின் வாழ்வியல் பற்றி தெரிந்து கொள்வதற்கான பலவகையான பொருட்கள் இடம்பெற்றுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் குரும்பர், காட்டு நாயக்கர், இருளர், பனியர், கோத்தர், தோடர் போன்ற பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த பழங்குடி இன மக்கள் வாழும் வீடுகள், பயன்படுத்தும் பொருள்கள், கோவில்கள், தேன் அடை, வெட்டிவேர், துளசிமணி, குண்டுமணி போன்ற மூலிகை மருந்துகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து பழங்குடியின மக்களின் உருவச்சிலைகள் சிலை வடிவமைக்கும் கலைஞர்களால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு   வைக்கப்பட்டுள்ளது. மேலும் 36 பிரிவுகளைச் சேர்ந்த பழங்குடியின மக்களின் போட்டோக்களும் அந்த அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளது. இதை காண்பதற்காக வழக்கத்தைவிட ஏராளமான மக்கள் இந்த அருங்காட்சியகத்திற்கு வருகின்றனர். மேலும் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை பற்றி ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கு இந்த அருங்காட்சியகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என பழங்குடியினர்  ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் உதயகுமார் கூறியுள்ளார்.

Categories

Tech |