நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தனது பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர். 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் தான் தேர்தல் வர வாய்ப்புள்ளது. இருப்பினும் கூட்டணி தேர்தல், அறிக்கை, பிரச்சார வியூகம் என அரசியல் கட்சிகள் தங்கள் பணியை தொடங்கி விட்டது. அதிலும் ஆளுங்கட்சியான திமுக எப்படியாவது 39 தொகுதிகளை கைப்பற்றியாக வேண்டும் என்ற முனைப்பில் வேலை செய்து வருவதாக உடன்பிறப்புகள் கூறுகின்றனர். அதன் வெளிப்பாடே முதல்வர் ஸ்டாலின் பம்பரமாக சுழன்று வருகிறார் என்றும் உடல் நலக்குறைவு ஏற்பட்ட போதிலும் கூட அலுவலகாம் மற்றும் கட்சி பணியை செய்து வருகிறார் என்றும் மார்த்தட்டி வருகின்றனர். திமுகவினர் தமிழகத்தில் திமுக வாக்கு வாங்கி பலவீனமாக உள்ள மாவட்டங்களில் உதயசூரியன் சின்னத்தை வெற்றி பெற வைப்பது உங்கள் வேலை என பொறுப்பு அமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
அதன் வெளிப்பாடே கோவையில் கடந்த மாதம் செந்தில் பாலாஜி நிகழ்த்திய அற்புதம் முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்ட 55 பேரை கட்சியில் இணைத்து அதிமுகவுக்கு அவர் அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதனைப் போல மேற்கு மண்டலத்தில் பலவீனமாக உள்ள தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை வலுப்படுத்த அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், காந்தி ஆகியோருக்கு பணிகள் கொடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரியில் முகாமிட்டுள்ள அமைச்சர் பன்னீர்செல்வம் அரசின் நலத்திட்ட பணிகளை உள்கட்சி தேர்தல் ஆகியவற்றை மும்முரமாக கவனித்து வருகிறார். அதன்படி கடந்த ஆண்டு திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் பழனியப்பன் எப்படியாவது மாவட்ட செயலாளரின் பதவி பெற தலைமையிடம் போராடி வருவதாக கூறப்படுகிறது. அதனால் பழனியப்பனுக்கு உள்ளூரில் உள்ள செல்வாக்கு குறித்து திமுக ஐடி விங் ஆய்வு செய்ததாக தெரிகிறது. அதில் தலைமைக்கு திருப்தியான அறிக்கை கிடைக்கவில்லையாம்.
இந்த தகவல் மாஜி அமைச்சருக்கு எட்டவே கணிசமான தொகையோடு சிலரை அணுகியதாகவும் அவர்கள் தலைமை முடிவை மாற்ற தங்களால் முடியாது என்று கையை விரித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அண்ணா அறிவாலய வட்டாரத்தில் விசாரித்தபோது, பழனியப்பனுக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கலாமா என்று மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை செய்தனர். அப்போது அவரை காட்டிலும் கட்சிக்காக உழைத்த நபர்களுக்கு அந்த பொறுப்பு வழங்கினால் நன்றாக இருக்கும் என்ற கருத்தே மேலோங்கியதாக தெரிகிறது. அதனால் திமுக எதிர்கட்சியாக இருந்தபோது உழைத்த நபர்கள் யாரேனும் ஒருவருக்கு பொறுப்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் முடிவு எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் தருமபுரி மாவட்டத்தில் பெரும்பான்மையான சமூகமான வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். அதனால் கொங்கு சமூகத்தை சேர்ந்த பழனியப்பன் பொறுப்புக்கு வர அவர் விரும்பவில்லை என்ற பேச்சும் அடிபடுகிறது.