Categories
அரசியல் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

பழனி என்ற பெயரை சொல்லும் போதே முருகன் என சேர்த்து உச்சரிக்கும் அளவுக்கு பழனி முருகன் கோவில் உலக புகழ் பெற்றதாகும். முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடு பழனி. உலகளவில் பழனி கோவில் பஞ்சாமிர்தம் தனி சிறப்புடன் விளங்குவதால் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. மலைகளின் இளவரசியான கொடைக்கானல் இந்த தொகுதியில் தான் அமைந்துள்ளது.

சுற்றுலாவை நம்பியுள்ள வியாபாரம் மற்றும் விவசாயமே பெரும்பாலான தொகுதி மக்களின் வாழ்வாதாரம். பழனி சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்ற கழகம் 5 முறை வெற்றிக்கொடி நாட்டி உள்ளது. அதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலா மூன்று முறை வென்றுள்ளன. காங்கிரஸ் கட்சி இரு முறை வெற்றி பெற்றுள்ள நிலையில், சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவாக திமுகவின் செந்தில்குமார் உள்ளார்.

பழனி தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,77,783. ஆன்மிக சுற்றுலாத் தலமான பழனிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து சென்றாலும் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் கூட முழுமையாக இல்லை. தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற விழா காலங்களில் நகரில் வாகன நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக இருப்பதால் பழனி பேருந்து நிலையத்தை விரிவாக்கம் வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றன.

பழனி, ஈரோடு இடையேயான அகல ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும், இதனால் வர்த்தகர்களும் பக்தர்களும் பயனடைவர் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பச்சையாறு தண்ணீர் சண்முக நதியில் கலப்பதால் தண்ணீரை சேமிக்க பச்சை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்பதும் விவசாயிகள் நீண்ட நாள் கோரிக்கை.

பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் மழைக்காலங்களில் பறை உருள்வதாலும், மண் சரிவு ஏற்படுவதாலும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இப்பிரச்சனைக்கு தீர்வு காணவும் கொடைக்கானல் பழனியை இரட்டை சுற்றுலா தலமாக மாற்றும் வகையில் இரு நகரங்களுக்கு இடையே ரோப்கார் சேவை அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், பல ஆண்டுகளாக இத்திட்டம் கிடப்பிலேயே உள்ளது. பழனி சுற்றுவட்டாரத்தில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் உருவாக வேண்டும், பாதாள சாக்கடை திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்பதெல்லாம் தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகள். நகரின் மையத்தில் அமைந்துள்ள வையாபுரி குளத்தை தூர்வாருவது உடன் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க வேண்டும் என்பதும், குளிர்பதன கிடங்கு வேண்டும் என்பதும் கொடைக்கானல் பகுதி விவசாயிகளின் கோரிக்கைகள். கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும், சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பதும் மக்களின் விருப்பமாக உள்ளது.

Categories

Tech |